நூறு திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்

நூறு திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்
X

கவின் சொற்கோ

தற்போது வரை 100 குறள்களை படித்துள்ளேன். அதை எப்படி கேட்டாலும் தவறில்லாமல் சரியாக சொல்வேன்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த், ஜீவிதா தம்பதியினர். இவர்களது 7 வயது மகன் கவின் சொற்கோ, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, தினமும் திருக்குறள்களை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.

நல்ல நினைவாற்றல் இருப்பதன் காரணமாக கடினமான திருக்குறள்களை கூட நினைவில் வைத்திருந்து எளிதாக சொல்லும் திறன் கவின் சொற்கோவிற்கு இருக்கிறது. இதனையறிந்த அவனது பெற்றோர் அதற்கேற்ப திருக்குறள்களை சொல்லித் தந்துள்ளனர். அதன் விளைவாக தற்போது 100 முதல் 1 வரையுள்ள 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் சொல்லி அசத்துகிறான், கவின் சொற்கோ.

அதுமட்டுமின்றி ஒன்று முதல் 100 வரை வரிசையாக குறள்களை சொல்வது, வரிசை எண்களை கூறினால் அந்த எண்ணிற்கான குறளை சொல்வது, அதிகாரத்தின் பெயரை கூறினால் அதிலுள்ள 10 குறள்களை சொல்வது என திருக்குறளை பல்வேறு வகையிலும் கவின் சொற்கோ சொல்லி அசத்துகிறான். மேலும் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி உள்ளிட்ட பல போட்டிகளிலும் பரிசுகளை கவின் சொற்கோ பெற்று வருகிறான்.

இதுகுறித்து கவின் சொற்கோ கூறுகையில், ”எனது பெற்றோர் பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஆங்கில கதைகள், திருக்குறள், பொது அறிவு தகவல்கள் என பலவற்றை சொல்லி தந்து வருகின்றனர். திருக்குறள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது வரை 100குறள்களை படித்துள்ளேன். அதை எப்படி கேட்டாலும் தவறில்லாமல் சரியாக சொல்வேன். 1330 திருக்குறளையும் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை” எனத் தெரிவித்தான். 7 வயது சிறுவன் கவின் சொற்கோ 100 திருக்குறள்களை தலைகீழாக நல்ல உச்சரிப்போடும், பிழையில்லாமலும் சொல்லி அசத்தி வருவது ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil