உடல் நலக்குறைவால் காட்டு யானை உயிரிழப்பு

உடல் நலம் பாதிக்கப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நடக்கமுடியாமல் ஒரே இடத்தில் இருப்பது தெரியவந்தது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் ,மேட்டுப்பாளையம், பவானி சாகர் நீர்பிடிப்பு பகுதி வழியாக கர்நாடக வரை செல்வது வழக்கம். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப் பகுதிக்கு உட்பட்ட திருமாலூர் பகுதியில் உடல்நலக்குறைவால் ஆண் யானை நிற்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆண் யானையின் உடல் நிலை குறித்து வனத்துறை மருத்துவர் மூலம் கண்காணித்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நடக்கமுடியாமல் ஒரே இடத்தில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ஆண் யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் கொடுக்கும் முயற்சிகள் நடைபெற்றது. இதில் மருந்துகள் ஏதும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆண் யானை நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது யானை பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தார். உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு யானை இறப்பிற்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings