அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகள் ; தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த பொதுமக்கள்

தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேனர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதி மக்கள் அரசாங்கம் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் சார்பில் சாலையோரம் பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், “சிவாஜி காலனி பகுதிகளில் செளடாம்பிகா நகர், சிம்சன் நகர், பல வருடங்களாக சாலை போட்டுத் தரவில்லை. மேலும் சாக்கடை வசதியும் இல்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இன்று வரை சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தரவில்லை.
ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என உறுதி கூறுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் புஸ்பானந்தம், மற்றும் சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் நடராஜன் ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் சாக்கடை வசதியை அரசு உடனடியாக செய்து தர வேண்டும் எனவும், இல்லையெனில் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu