விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்தம் பரபரப்பு
அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு இன்று பிற்பகல் கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்திலிருந்து மும்பையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் கிளம்பினார்.
அப்போது கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்ததன் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை மட்டும் உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அமைச்சர் யார் என்று கூறத் தெரியாமல் பாதுகாப்பு பணிக்கு எப்படி வருகிறார்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பிவைத்து திரும்பினார். இது குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் தெரியாமல் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு தெரியவில்லை. வேண்டும் என அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் முத்துசாமியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu