கோவை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது திமுக தான் : கணபதி ராஜ்குமார்
கணபதி ராஜ்குமார்
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வழியாம்பாளையம், காப்பிக்ககடை பஸ் ஸ்டாப், விசுவாசபுரம், விளாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோம்பங்காட்டு புதூர், இச்சிப்பட்டி, பள்ளிபாளையம், நடுவேலம்பாளையம், சுக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அப்போது பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ”கோவை மக்களுடன் மக்களாக இருப்பவன் நான். ஏற்கனவே உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்த நான் உங்களின் மனநிலையை புரிந்து கொண்டு, உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பேன் என்பதை உறுதி அளிக்கின்றேன். கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது திமுக அரசு தான். சிறுவாணி குடிநீர் மட்டுமல்ல, பில்லூர் முதலாம் குடிநீர் திட்டம், பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்டம், தற்போது சமீபத்தில் பில்லூர் 3 ம் குடிநீர் திட்டத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
தற்போது பருவ மழை குறைவானதால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளது. உங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும். திராவிட மாடல் அரசு, மக்களுக்கு தேவையான காலத்தால் அழியாத திட்டங்களை வழங்கி உள்ளது. இந்த திட்டங்களை கூறி நான் வாக்கு சேகரித்து வருகின்றேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த வரவேற்புகளை பார்க்கும்போது, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து, மோடியை தூக்கி வீச மக்கள் தயாராகி விட்டனர் என்பது தான் உண்மை. இந்த பாசிச பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” எனக் கூறி வாக்குசேகரித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu