முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை
X

பையா என்கிற கிருஷ்ணன்

திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பையா என்கிற கிருஷ்ணன். 65 வயதான இவர், ரியல் எஸ்டேட், விவசாயம் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார். மேலும் திமுக பிரமுகராகவும் இருந்து வந்தார். காளப்பட்டி ஊராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் திமுகவில் இணைந்த இவர், அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். குறிப்பாக கோவை மேற்கு மாவட்ட செயலாளராகவும் பையா என்கிற கிருஷ்ணன் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் பையா என்கிற கிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித கட்சி பதவியிலும் பையா என்கிற கிருஷ்ணன் இல்லாமல் இருந்து வந்தார். மேலும் கட்சி பணிகளிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் பையா என்கிற கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பையா என்கிற கிருஷ்ணன் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!