விக்கரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் : எடப்பாடி பழனிசாமி

விக்கரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் : எடப்பாடி பழனிசாமி
X

எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். விரைவில் அனைத்தும் தெளிவுபடுத்தப்படும்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலை விட 1 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. திமுக, பாஜக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அதிமுக வாக்குகள் சரிந்தது போல தோற்றத்தை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது. தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

திமுக அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம் பல்வேறு வகையில் முழு பலம் பயன்படுத்தினார்கள். ராகுல்காந்தி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், வைகோ என பல தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள். பாஜக கூட்டணியில் பிரதமர் பலமுறை தமிழகத்திற்கு வந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதேபோல பல மத்திய அமைச்சர்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள். மத்திய, மாநில அமைச்சர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்கள். எங்களது கூட்டணியில் சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டதால், ஒரு சில தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடிந்தது. இத்தனைக்கும் இடையில் 1 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.

கோவையில் 2014 ல் திமுக மூன்றாவது இடத்திற்கு வந்தது. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 42 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றார். மக்கள் நாடாளுமன்ற தேர்தல் ஒரு மாதிரியும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். இது அதிமுகவிற்கு சரிவு கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் சிபிஎம் வெற்றி பெற்றாலும், சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் வென்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விசம பிரச்சாரம் செய்து தான் திமுக வெற்றி பெற்றது. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுகவிற்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தது. தனித்து நின்றிருந்தால் எங்களை விட குறைவான வாக்குகளை பெற்றிருப்பார்கள். இவ்வளவு வெற்றி பெற்றிருக்க முடியாது.

திமுக முப்பெரும் விழா குறித்து திமுகவினரிடம் தான் கேட்க வேண்டும். கொங்கு மண்டலம் திமுக கோட்டை என்பது கற்பனை. 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை, சேலத்தில் அதிமுக தோல்வி அடைந்தாலும், அடுத்த வந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சட்டமன்றத்திற்கு வேறு மாதிரியும், நாடாளுமன்றத்திற்கு வேறு மாதிரியும் மக்கள் வாக்களிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி, பாஜக கூட்டணி என இரண்டு பேர் தான் முன்னிறுத்தப்பட்டார்கள். தமிழ்நாட்டின் மக்களின் உரிமையை காக்க யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டு உரிமை பாதுகாக்க முடியாமல் போய்விடும். பிரிந்து சென்றவர்கள் எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள்? பிரிந்து சென்ற நிலையிலும் அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. இது கட்சி பலமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!