18 ம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; ட்ரோன் பறக்க தடை
Coimbatore News- காவல் ஆணையாளர் அலுவலகம் (கோப்பு படம்)
Coimbatore News, Coimbatore News Today- தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வரும் பிரதமர் நரேந்திர மோடி கோவை நகருக்கு 18ம் தேதி வருகிறார். அன்று மாலை பிரமாண்ட வாகன அணிவகுப்பு பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கண்ணப்பன் நகர் பிரிவில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வாகன அணிவகுப்பு பேரணியானது நடைபெற இருக்கிறது. கோவை மட்டுமின்றி மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
சுமார் ஒரு லட்சம் பேர் வரை பிரதமர் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவல் துறையினர் வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை நகரில் பிரதமர் வருகையின் போது சுமார் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பிற்கான எஸ்.பி.ஜி பிரிவு அதிகாரிகளும் வாகன பேரணி நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே கோவையில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவித்துள்ள மாநகர காவல் துறையினர், இந்த பகுதிகளில் 19 ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை அதிகரித்து வருகின்றனர். ஒரே மாதத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு இரண்டாவது முறையாக வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu