கோவை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: வேடமணிந்து வந்த பக்தர்கள்
காளி உள்பட பல்வேறு வேடமணிந்து வந்த பக்தர்கள்.
கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் அன்னியப்பன் வீதியில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ் வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் தசரா திருவிழா நேற்று காலை 11.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று காலையில் தொடங்கிய பிறகு இந்த கோவிலில் தசரா திருவிழா தொடங்கியது.
இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாலைகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து விட்டு பூசாரி மூலம் கழுத்தில் அணிந்து கொண்டனர். இதையொட்டி ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாவித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. நேற்று திருவிழா தொடங்கியதையொட்டி தசராக்குழுவினர் இந்து, முஸ்லிம், மாரியம்மன், போலீஸ் என பல்வேறு வேடங்கள் அணிந்து கோவை மாநகர பகுதியில் உலா வர ஆரம்பித்து உள்ளனர். தொடர்ந்து குலசையில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu