கட்சி கட்டளையிட்டால் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன் : எல்.முருகன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன்.
Central State Minister Interview
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவு உடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பாஜகவினர் மேலும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த நல்லாட்சியை தந்துள்ளார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே அவரது எண்ணம். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என பிரதமர் உழைத்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். தேசத்திற்கு எதிரானவர் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது யார் என்பதும் மக்களுக்கு தெரியும். கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம். நாட்டின் வளர்ச்சி தான் பாஜக இலக்கு. 2 ஜி ஊழல் வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வரும்.
யாரையும் மிரட்டி தேர்தல் பத்திர நிதி வாங்கவில்லை. திமுக, காங்கிரஸ் அப்படித் தான் தேர்தல் பத்திர நிதி வாங்கினார்களா? தாங்களாக முன்வந்து தேர்தல் பத்திர நிதியை தந்துள்ளார்கள். மாநிலத்தில் அதிக நிதி தேர்தல் பத்திரம் மூலம் வாங்கியது திமுக தான். என்ன ஊழல் செய்து அந்த நிதியை வாங்கினார்கள்? 2 ஜியில் ஆகாயத்தில் ஊழல் செய்தது ஆ.ராசா. அதனால் பயன்பட்டது திமுக குடும்பம். ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் திமுகவிற்கு கிடையாது. பிரதமர் மோடி ஊழலற்ற நிர்வாகத்தை தந்து வருகிறார்கள். பாஜக அமைச்சர்கள் மீதோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதோ சிறிய புகார்கள் இல்லை. தேர்தல் பத்திர நிதி விபரங்களை கட்சி தலைமை வெளியிடும்” எனத் தெரிவித்தார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஒரு சாதாரண தொண்டன். கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ, அதை நிறைவேற்றுவது தான் சாதாரண தொண்டனின் கடமை, பணி. கட்சி சொன்னால் போட்டியிடுவேன். நீலகிரி தொகுதி மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நிதி ஒதுக்கி மக்கள் பணிகளை செய்து வருகிறேன்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ராகுல்காந்தி, ஸ்டாலின் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். கூட்டணி இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் உறுதியாகும். கோவை பாஜக கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதி” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu