கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு

கோவை நாடாளுமன்ற தெகுதி வாக்கு எண்ணிக்கை மையம் (கோப்பு படம்).
கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி முகவர்களும் அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று முதல் அந்த பகுதி தற்காலிக ரெட் ஜோனாக கோவை மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ளசாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை, ஆர்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூர் ஆகிய பகுதிகள் அனைத்தும் தற்காலிக ரெட் ஜோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் வரும் ஜூன் 4 ம் தேதி வரை இந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் 2021 ல் கொண்டு வரப்பட்ட டிரோன் விதிமுறைகளின்படி 96 மணி நேரங்களுக்கு மட்டுமே டிரோன்கள் பறக்க தடை விதிக்க முடியும் என்ற நிலையில், இன்று முதல் மே 2 ம் தேதி வரை 96 மணி நேரத்திற்கு கோவை மாநகர காவல் துறையினர் டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர். இந்த உத்தரவினை வரும் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை 96 மணி நேரத்திற்கு ஒரு முறை உத்தரவினை பிறப்பிக்க மாநகர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu