‘மோடிக்கும் கோவைக்கும் ஹாட் லைனாக இருப்பேன்’ அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி

‘மோடிக்கும் கோவைக்கும் ஹாட் லைனாக இருப்பேன்’  அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி
X

கோவை பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை.

பிரதமர் மோடிக்கும் கோவை மக்களுக்கும் இந்த அண்ணாமலை ஹாட் லைனாக இருப்பான் என தேர்தல் வாக்குறுதி அளித்து உள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நம்முடைய போட்டி கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களுடனும் கிடையாது. 2019ம் ஆண்டு 295 தேர்தல் வாக்குறுதியை அளித்தோம். அது அத்தனையையும் நிறைவேற்றி இருக்கின்றோம். அதேபோல் 2024 கூறுகின்ற தேர்தல் வாக்குறுதியையும் செய்யப் போகின்றோம். மற்றொரு பக்கம் ஒரு கட்சியின் வேட்பாளர் கமிஷன் வாங்குவதற்காக பாலம் கட்ட கூடிய ஒரு கட்சி. ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆட்சியில் இருந்த ஒரு கட்சி, இன்று வளர்ச்சியை பற்றி பேசுகிறது. இவர்கள் கமிஷன் பெறுவதற்காகவும் கொள்ளை யடிப்பதற்காகவும் வளர்ச்சி என்ற வீக்கத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கோவை மக்களுக்கு தெரியும்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கோவை பாராளுமன்றத்தை எப்படி மாற்றிக் காட்ட போகின்றோம் என்ற சவாலுக்காக நாங்கள் வந்திருக்கின்றோம். மோடிக்கும் மத்திய அமைச்சரவைக்கும் கோவை மக்களுக்கும் இந்த அண்ணாமலை ஹாட் லைனாக இருப்பான். இன்றைய தினம் பண பலத்தை வைத்து தீர்மானிக்க கூடிய அரசியலாக தமிழக அரசியல் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் ஒருவர் கூறுவதை முழுமையாக கேட்பதில்லை. கேட்கக்கூடிய தன்மையையும் இழந்து விட்டார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் கோவையில் ஜெயிக்க முடியும் என்பது நம்முடைய சவால். இதேபோன்று பிற கட்சிகளை சவால் விடக் கூறுங்கள். அவர்கள் ஆளுகின்ற பொழுது சம்பாதித்த பணமெல்லாம் யார் கையில் இருக்கிறதோ அவர்களில் பாதி பேர் தான் வேட்பாளர்களாக உள்ளார்கள். பாஜகவினர் அவர்களது கை காசை போட்டு வேலை செய்கிறார்கள். இதுதான் மாற்று அரசியல். மாற்று அரசியல் செய்யாமல் கல்லாப்பெட்டி கட்டியவர்களுக்கு அது பற்றி எப்படி தெரியும்?. எனவே யார் என்ன பேசுகிறார்கள் என்று முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி டீ குடிக்க வேண்டும் என்றால் கூட யாரிடமாவது பணம் கேட்டு தான் டீ குடிப்பார் போல் உள்ளது. எனவேதான் அதனை உதாரணமாக கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை டீ குடிக்க வேண்டும் என்றால் கூட சொந்த காசில் தான் குடிப்போம்.

மதுரை எய்ம்ஸ் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு வருகிறார். அவரது அறிவு அவ்வளவு தான். அரசியலில் பக்குவப்படாதவர்கள் அறிவு இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு சமுதாய பணி செய்பவர்கள் இவர்களெல்லாம் வராமல் தாத்தா அப்பாவின் பெயரை இன்சியல் ஆக வைத்துக் கொண்டு வந்தால் செங்கலை தூக்கிக் கொண்டு காட்டுகின்ற புத்தி தான் இருக்கும். 2026ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். கலைஞர் கருணாநிதி குளித்தலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதிமுகவும் திமுகவும் ஏப்ரல் பத்தாம் தேதி ஒன்றிணைய போகிறது. அப்போதுதான் பங்காளி கட்சிகளின் சுயரூபத்தை பார்ப்பீர்கள். தற்பொழுது இரண்டு கட்சிகளும் நிற்பது எதற்கென்றால் பண பலத்தை வைத்து அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தான்.

ஏப்ரல் 10ம் தேதிக்கு மேல் இரு கட்சிகளும் இரண்டு வேட்பாளர்களில் ஒரு வேட்பாளரை விட்டு கொடுத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி, ஓட்டு டிரான்ஸ்பர் செய்வதற்கு முயற்சி செய்வார்கள். இது தமிழக அரசியலில் கோவையில் முதல்முறையாக நடக்கும். அதிமுகவினர் யாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கிடையாது. பணத்தில் கொள்ளையடித்து அதில் இரண்டு குழுக்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்பவர்கள் இவர்கள். இவர்களெல்லாம் ஐந்து வருடம் மந்திரியாக இருந்து விட்டார்கள் சம்பாதித்து விட்டார்கள். அடுத்த பத்து வருடம் அதனை செலவு செய்வார்கள், அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் சம்பாதிப்பார்கள். இவர்களெல்லாம் பழைய தலைவர்களுக்கு நிகர் கிடையாது. இவர்கள் என்ன சமுதாய தலைவர்கள் அடிப்படையில் என்ன மாற்றத்தை செய்துள்ளார்கள்?

கோவையில் என்ன அடிப்படை மாற்றம் வந்துள்ளது? ஊர் சூடானது தான் மிச்சம். முழுமையாக அமைதியாக இருக்கக்கூடிய ஒரு ஊர் என்று இரண்டு டிகிரி மூன்று டிகிரி வெப்பநிலையை ஏற்றி விட்டார்கள். 10 வருடங்களாக மந்திரியாக இருந்து கொள்ளையடித்து மக்கள் பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து விட்டு தேர்தல் நேரத்தின் பொழுது பணம் கொடுத்தால் அது வளர்ச்சியா? அது வீக்கம். இதனைக் கோவை மக்கள் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது ஸ்டாலினுக்குதான். ரஷ்யாவின் ஸ்டாலினுக்கும், இங்கிருக்கும் ஸ்டாலினுக்கும் எந்த வித மாறுபாடும் கிடையாது. ஜனநாயகத்தை பற்றி பேச ஒரு தலைவருக்கு உரிமை இல்லை என்றால் அது ஸ்டாலின் மட்டுமே.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!