பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: பொதுமக்கள் உற்சாகம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதனை காணவும், பலூனில் ஏறி பயணிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை ராட்சத பலூன்களில் வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் சில கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றன. இதில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து வெப்ப பலூன்கள் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரையும், அருகே பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட பலூன்கள் உள்ளன. இந்த பலூன்களில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.
பலூன் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் ஏராளமானோர் இன்று காலை முதலே பொள்ளாச்சியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் வானில் பறக்கும் பலூன்களையும், ஒளி வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலூன்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இந்த பலூன் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடக்கிறது. இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்போர் பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் பறந்தபடி பொள்ளாச்சி நகரை பொதுமக்கள் ரசிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu