விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய விவசாயிகள்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய விவசாயிகள்
X

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 

கோவையில் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தும் மின் இணைப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

கோவை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.1.50 லட்சம் கட்டி உடனடியாக மின் இணைப்பு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணத்தை கட்டி மின் இணைப்புக்கு விண்ணப்பித்தனா். ஆனால், இத்திட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயனடைந்துள்ளனா்.

தட்கல் திட்டத்தில் பணத்தை கட்டிய பின் நடப்பு ஆண்டிற்கான இலக்கு முடிவடைந்துவிட்டது, அடுத்த ஆண்டில் அறிவிப்பு வந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரியத்தினா் தெரிவித்தனா். பலா் கடன் வாங்கி விண்ணப்பித்தனா். இதனால், விவசாயிகள் கடனாளியானதுதான் மிச்சமாகியுள்ளது. எனவே, தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்

கொப்பரை கொள்முதலில் வியாபாரிகள் ஆதிக்கம் இருப்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், கோவை மாவட்டத்தில், அனைத்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் சிட்டா, அடங்கலை பயன்படுத்தி வியாபாரிகள் கொப்பரைகளை விற்பனை செய்து வருகின்றனா். தவிர, சிறிய அளவில் விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரைகளை கொள்முதல் செய்வதில்லை. பல விவசாயிகளிடம் இருந்து வாங்கி மொத்தமாக கொண்டு வரும் வியாபாரிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கன்றனா். எனவே, விவசாயிகள் கொண்டுவரும் குறைந்தபட்ச அளவிலான கொப்பரைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்

மேலும், கோவையில் பிரதான பயிராக இருந்து வரும் தென்னை மரங்கள் சமீபகாலமாக பல்வேறு நோய்த்தாக்குலுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த 6 மாத காலங்களாக வாடல் நோயால் தென்னை விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனா். இந்நோய் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் வேளாண் துறை பரிந்துரை செய்த ரசாயன மருந்துகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது உரிய மருந்துகள் இல்லாமல் வாடல் நோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் மஞ்சள் ஒட்டுப்பொறி போன்ற கட்டுப்பாட்டு முறைகள் உரிய பலனளிப்பதில்லை.

எனவே வாடல் நோயை கட்டுப்படுத்த உரிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் பந்தல் காய்கறி பயிர்களில் ஏற்படும் நோய்த் தாக்குதலுக்கும் மருந்துகள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதற்கும் தீா்வு காண வேண்டும் என கூறினர்.

மேலும், ராஜவாய்க்காலை பருவமழை தொடங்குவதற்கு முன் வரத்து வாய்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், கல் குவாரிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேனீ வளா்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!