விளைச்சல் இருந்தும் விலை இல்லை: கசக்கும் பாகற்காய் சாகுபடி
பாகல் கொடி பந்தல் - கோப்புப்படம்
ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைமலை, சின்னப்பம்பாளையம், வேட்டைக்காரன் புதூர், ஒடைய குளம், செம்மேடு, சரளப்பதி, சர்க்கார்பதி, தம்பம்பதி பகுதிகளில் ஆண்டுதோறும் 1,000 ஏக்கரில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும்காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவிற்கு சிப்ஸ் தயாரிக்க பாகற்காய் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால், விவசாயிகள் ஆர்வமுடன் பந்தல் காய்கறி சாகுபடி செய்தனர். தற்போது நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒருமுறை பந்தல் அமைத்தால் 7 ஆண்டுகளுக்கு சிரமம் இருக்காது. ஒரு ஏக்கருக்கு ஆள் கூலி, உரம், விதை போன்றவற்றிற்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது.
நல்ல காலநிலை இருக்கும் பட்சத்தில் 8 டன் முதல் 10 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. ஆனால் போதிய விலை கிடைப்பதில்லை. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.35 முதல் ரூ.40 விற்ற பாகற்காய், தற்போது ரூ.18 முதல் ரூ.21 வரை மட்டுமே விற்கிறது. இதேபோன்று ஒரு கிலோ புடலங்காய் ரூ.10, பீர்க்கங்காய் ரூ.24, சுரக்காய் ரூ.10 என விலை குறைந்து உள்ளது.
இதில் இடைத்தரகர்கள் தலையீடும் உள்ளது. விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் காய்கறிகளை பறிக்காமல் விட்டுள்ளோம். எனவே பந்தல் காய்கறிகளுக்கு அரசு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu