விளைநிலத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானையை பாசத்துடன் அனுப்பிய விவசாயி
விளைநிலத்தில் புக முயன்ற யானையை பாசத்துடன் தடுத்து நிறுத்திய விவசாயி - வீடியோ பதிவு
கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டி பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இருந்த போதிலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானைகளை சாமி என்று அழைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
தேக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி. இவருக்கு அங்குள்ள வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. இங்கு பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
நேற்று காலை மணியும், அவரது மனைவியும் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்தை விட்டு வெளியில் வந்த ஒற்றை காட்டு யானை, மணியின் விவசாய நிலத்தை நோக்கி வேகமாக வந்தது.
வந்த வேகத்தில் விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. இதை பார்த்ததும் விவசாயி மணியும், அவரது மனைவியும் அச்சப்பட்டனர்.
இருந்த போதிலும் யானை சொன்னால் கேட்டுக்கொள்ளும் என நினைத்து, யானையை அன்போடும், பாசத்தோடும், ஒரு சகோதரன், நண்பனை அழைப்பது போல போ சாமி போ, அதே தான் பார்த்து போ என்று பாசத்துடன் இருவரும் கூறினர்.
இதை கேட்ட யானை விளை நிலத்திற்குள் நுழையவில்லை. மாறாக தனது வழித்தடத்தை மாற்றி அருகில் இருந்த நீரோடை பகுதி வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
யானை சென்ற பின்னர் விவசாயி மணி தனது வழக்கமான வேலைகளை தொடர்ந்தார்.
விளை நிலத்தில் பயிர்களை உட்கொள்ள வந்த ஒற்றை காட்டு யானையை பாசத்துடன் விவசாயி பேசியே வழியனுப்பி வைத்த நிகழ்வு விவசாயிகளுக்கும், யானைகளுக்குமான நட்புறவை உணர்த்துவதாக அமைந்தது.
இதனை அந்த பகுதியில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu