மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் உலா: பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் உலா: பொதுமக்கள் பீதி
X

கோப்புப்படம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் பாகுபலி யானையுடன் மேலும் இரண்டு யானைகள் அதே பகுதியில் முகாமிடத் தொடங்கியுள்ளன.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டு யானை,மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது.

அதன் ஒருபகுதியாக கடந்த சில தினங்களாகவே மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் ஒற்றைக்காட்டு யானை பாகுபலி சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் உலா வருவதும், பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவதுமாக இருந்து வருகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பாகுபலி யானையுடன் மேலும் இரண்டு யானைகள் கூட்டு சேர்ந்து அதே பகுதியில் முகாமிடத் தொடங்கியுள்ளன. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சமயபுரம் பகுதி பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மிகப்பெரிய உடலமைப்பு மற்றும் பெரிய தந்தங்களுடன் கூடிய யானை என்பதால் அதற்கு பாகுபலி என பெயரிட்டு வந்து அழைத்து வருகிறோம். கடந்த சில தினங்களாகவே ஒற்றைக்காட்டு யானை பாகுபலி தங்கள் பகுதியில் முகாமிட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 2 யானைகளும் அதனுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் வசிக்கும் தாங்கள் மிகுந்த அச்சத்துடன் உடனேயே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story