ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை: ஆட்சியர் உத்தரவு
ஆழியாறு அணை - கோப்புப்படம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை தவிர கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அணையை ஆழப்படுத்தவும், தூர்வாரும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணையில் கடந்த ஒரு மாதமாக அணையில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு லாரிக்கு 4 யூனிட் வீதம் ஒரு லோடுக்கு ரூ.400 வீதம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் அணையில் இருந்து மண் எடுப்பதை நிறுத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண் மற்றும் மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்கு வெட்டி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மண் எடுப்பதற்கான ஆணைகளை பெற்று விவசாய பயன்பாட்டிற்கு தற்போது வரை மண் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனைமலை தாலுகா ஆழியாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட கன அளவு முழுமையாக எடுக்கப்பட்டு விட்டது. அதன்படி 67 ஆயிரம் கன மீட்டர் மண் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆழியாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வழிவகை இல்லை. இதனால் அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்ற ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து மண் எடுப்பது நிறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu