தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: உ.பி.முதல்வர் பேச்சு
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது,
"ராமஜென்ம பூமி அமைந்துள்ள உத்தரபிரதேசத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் புனிதமான தொடர்பு உள்ளது. அயோத்தியில் ராமஜன்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்காக தமிழக மக்கள் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பங்களிப்பு செய்துள்ளனர். இதற்காக நாட்டு மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரவுள்ள 5 மாநில சட்டசபைத் தேர்தலில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு வருகிறேன். அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைப்பதோடு, மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைபற்றும். கேரளாவில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும்.
அதே போல தமிழகத்திலும் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும். மத்திய அரசு அனைத்து துறையிலும், அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சி என்ற நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் மையமாக கோவையை உருவாக்கும் பொருட்டு டிபன்ஸ்காரிடார் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பல லட்சம் பேருக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 54 லட்சம் வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் தொடருவதற்கு தமிழகத்தில் அ.தி.மு.க அரசு தொடர வேண்டும்.
தமிழகம் பெண்களை உயர்வாக பார்க்கக் கூடிய மாநிலம். குமரி முதல் துவங்கி தமிழகம் எங்கும் பெண்கள் போற்றப்படுகின்றனர். ஆனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் பெண்களுக்கு எதிரான மன நிலைக் கொண்டவர்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, பெண்களின் மேம்பாடு குறித்த எந்த அக்கறையும் இருக்காது. ஆனால், காமன்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என்று ஊழலுக்கு பெயர் பெற்றவர்கள்.
தமிழகத்தில் ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களின் கீழ் பல்வேறு நகரங்களில் வளர்ச்சிப் பணி நடந்து வருகிறது. கொரொனாவால் உலகமே ஸ்தம்பித்த போது, மத்திய அரசு அதை திறமையாக எதிர்கொண்டது.
இப்போது அதை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. கொரொனா பாதிப்பிற்கு பின்னர் தொழில்துறை மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணியில் தமிழக மக்களின் பங்களிப்பு மகத்தானது" என அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu