காப்பீடு திட்டத்தில் கட்டணம் வசூலா? புகார் தெரிவிக்க கோவை ஆட்சியர் அழைப்பு
கோவை ஆட்சியர் - கோப்பு படம்
இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஏ1,ஏ2 தர மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய கிசிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.20,000, ஏ3 முதல் ஏ6 வரையுள்ள தரத்திலான மருத்துவமனைகளில் ரூ.18,500, கோவை மாநகாரட்சிக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.15,000, ஏ3 முதல் ஏ6 வரையுள்ள தரத்திலான மருத்துவமனைகளில் ரூ.13,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகள், மற்ற பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த கட்டணம் பொருந்தும். காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
காப்பீட்டு திட்ட அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது அட்டை உள்ளதா என அறியாவிட்டாலோ அவர்களது பழைய அல்லது புதிய ரேஷன் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு திட்ட அலுவலர் அல்லது மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலரிடம் (செல்போன் எண்: 7373004211) அளிக்கலாம். இல்லையெனில், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077- ஐ தொடர்பு கொண்டு தங்கள் காப்பீட்டு அட்டை நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் பயனாளியிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது. மற்ற பொதுமக்களை பொறுத்தவரை மேற்கூறிய கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியறை மற்றும் பிற வசதிகள் கொண்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ, முதல்வர் காப்பீட்டு திட்ட பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ, 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். கூடுதல் விவரங்களை https://www.cmchistn.com/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu