ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்
X

கோவை காந்திபுரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதன்படிகோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சந்தைகளில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று, பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மாவட்டம் முழுவதும் மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவையும் இன்று மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கோவில்கள், தேவலாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து உணவகங்கள், அடுமனைகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல், இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் இன்று அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படவில்லை. பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்