பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
X

பைல் படம்.

கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், திருநாவுக்கரசு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 2019ம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு ஆகிய மூவரை சிபிஐ கைது செய்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். கைதான 9 பேருக்கு விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு விசாரணையானது துவங்கப்பட உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தினமும் இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கினை விசாரித்து 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தினம்தோறும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த வழக்கில் கைதாகியுள்ள 9 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட இருக்கிறது.

இன்று ஒன்பது பேருக்கும் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில் வீடியோ கான்பிரசிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. விரைவில் 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வழக்கு விசாரணை தினந்தோறும் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!