கோவை மாவட்டத்தில் 107 மையங்களில் தடுப்பூசி: நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்
கோவை ராமநாதபுரம் தடுப்பூசி முகாமில், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தாலும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது, மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் தற்போது வரை தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 202 தடுப்பூசிகள் ஆகும். மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கோவைக்கு 18,000 கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 107 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு 16300 கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தடுப்பூசி மையத்துக்கும் 100 முதல் 400 தடுப்பூசிகள் வரை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள், சிறைத் துறை அலுவலர்கள், ஜே.டி அலுவலகப் பணியாளர்கள், அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்கள் என தனித்தனியே 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 900 கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது.
பெரும்பாலான தடுப்பூசி மையங்களில், அதிகாலை 5 மணி முதல் காத்திருந்து டோக்கன் பெற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் கோவிஷீல்ட் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் எந்த மையத்திலும் இன்று கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu