சட்டமன்ற தேர்தல் கண்டிப்பாக போட்டியிடுவேன்: கமல்ஹாசன்
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொழில் துறை தொடர்பாக 7 வாக்குறுதிகளை கமல்ஹாசன் அறிவித்தார். அதில் புத்தாக்கம் மற்றும் புதிய சத்தியக்கூறுகளுக்கு அமைச்சரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், ஐந்தாம் கட்ட பரப்புரையின் போது, மக்களிடம் பேரெழுச்சியை பார்க்கிறோம் எனவும், இது சந்தோஷமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மநீமவிற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கிடைக்காது என்ற அமைச்சர் கருப்பண்ணன் கருத்து குறித்த கேள்விக்கு, அது அவரது பிரார்த்தனை எனவும், எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது எனவும் பதிலளித்தார். கூட்டணி தொடர்பாக இப்போது முடிவு சொல்ல முடியாது எனக்கூறிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக என பதிலளித்தார். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அது தகவல் தான். நான் சொல்லவில்லை என பதிலளித்தார்.
பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்ற கேள்விக்கு, வேட்பாளர்களை தகுதி பார்த்து நிறுத்துவோம் என பதிலளித்தார். வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், நியமிக்கப்பட்ட குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். நாங்கள் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள் கிடையாது. மனித வளத்திற்காக முதலீடு எனவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை தாமதிக்கப்பட்ட நீதியாக பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu