கோவைக்கு 10 ஆண்டுகளாக பாஜக செய்தது என்ன? திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கேள்வி
கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று காலை மணியகாரம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட காந்திமாநகரில் பிரச்சாரத்தை துவக்கினார். வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அப்பகுதியில் தூய்மை பணியாளர்களிடமும் வாக்குசேகரித்தார்.
அப்போது, கலைஞர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வருவதாகவும், இலவச பேருந்து பயணத்தால், பேருந்து கட்டணம் சேமிப்பாவதாகவும் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு தேவையானவைகளை வழங்கி வருவதுடன் தகுந்த பாதுகாப்பை அளித்து வருகின்றார். எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு தான் என வேட்பாளரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில் இந்த தேர்தலை பொருத்தவரையில் ஒரு முக்கியமான தேர்தல் இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக நமது கோவை பாராளுமன்ற தொகுதி அமைந்திருக்கிறது. திமுக, செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. பல இடர்பாடுகளுக்கு நடுவே நிதி நெருக்கடியின் நடுவே பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரே அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம். அதனால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக இன்றைக்கு தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. உங்களிடத்திலே வரக்கூடிய எதிரணி வேட்பாளர்கள் எதிரணி கட்சியினர் வருவார்கள்
கடந்த 10 ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நமக்கு என்ன கொடுத்தது என்றால்? விலை உயர்வு, விலை ஏற்றத்தை தான் கொடுத்தது. கேஸ் விலை, பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. அன்பு சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் இது தெரியும். இப்படி இருக்க அவர்கள் ஏதோ நிறைய செய்தது போல உங்களிடத்திலே வந்து வாக்கு கேட்பார்கள். ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் அளிப்பேன் என்று பிரதம மந்திரி வாக்குறுதி கொடுத்தார். அது என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்க வேண்டும்.
அதேபோல அண்ணா திமுகவை பொறுத்த வரைக்கும், அவர்களுக்கு பிரதம மந்திரி வேட்பாளர் என்பது கிடையாது. அவர்கள், இப்பொழுது பிஜேபியும் அவர்களும் தனியாக இருக்கிற மாதிரி தெரியும். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் சேர்ந்து கொள்வார்கள். வரக்கூடிய காலகட்டத்தில் இந்த விலைவாசி உயர்வை தடுத்திட, இந்த ஜிஎஸ்டி பிரச்சனைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல பாராளுமன்றத்தில் இந்த தொகுதியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu