கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்களிப்பு
கணபதி ராஜ்குமார் குடும்பத்துடன் வாக்களித்தார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்குச் சாவடிகளில் வந்து வாக்களித்து வருகின்றனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். அந்த வாக்குச்சாவடியில் முதல் நபராக வந்து தனது வாக்குப்பதிவை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், ”என்னுடைய ஜனநாயக கடமையை நான் ஆற்றி உள்ளேன். அதே போல் எல்லாரும் இதே மாதிரியான ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை நன்றாக செய்துள்ளனர். திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக ஏற்கனவே அதிமுக சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதேபோல கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்களிக்க குடும்பத்துடன் வருகை தந்தார். பின்னர் வரிசையில் காத்திருந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் பேட்டியளித்த கணபதி ராஜ்குமார், ”மக்கள் மத்தியில் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜிஎஸ்டி வரியை நீக்குவோம் என இந்தியா கூட்டணி வாக்குறுதி அளித்தது மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. அதனால் மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu