கோவையில் வ.உ.சி. சிலை: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறப்பு

கோவையில் திறந்து வைக்கப்பட்ட வ..உசி. சிலை.
கோவையில் வஉசி சிலையை முதல் அமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
செக்கிழுத்த செம்மல் என போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கியதால் இவர் கப்பலோட்டிய தமிழன் என்றும் போற்றப்படுகிறார். சுதேசி கப்பல் இயக்கிய குற்றத்திற்காக இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கோவை சிறையில் தான் அனுபவித்தார். கோவை சிறையில் அவர் இழுத்த செக்கு இன்றும் காட்சிபொருளாக வைக்கப்பட்டு உள்ளது.
அவரது நினைவை போற்றும் வகையில் வ.உ.சிதம்பரனாருக்கு கோவையில் சிலை அமைக்கவேண்டும் என கோவை மாநகர மக்கள் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.
அதனை நிறைவேற்றும் வகையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு வ.உ.சிதம்பரனருக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வ.உ.சி. மைதானத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 7 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையொட்டி இன்று திறந்து வைக்கப்பட்டது.
வ.உ.சி. வெண்கல சிலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். கோவையில் நடந்த விழாவில், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட வ.உ.சி. சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu