வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
X

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள்

26 புள்ளி மான்கள் வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.

கோவை மாநகரில் வஉசி உயிரியல் பூங்கா முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக செயல்பட்டு வந்தது. இங்கு மான்கள், பறவைகள், முதலை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த உயிரியல் பூங்காவிற்கு அங்கீகாரத்தை நீட்டித்து வழங்கக் கோரி, கோவை மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி அங்கீகாரம் வழங்க மத்திய உயிரியல் ஆணையம் அனுமதி மறுத்தது. இதையடுத்து கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட வந்த விலங்கினங்களை இடமாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி 530 க்கும் மேற்பட்ட உயிரினங்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை வனப்பகுதியில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெலிக்கான் பறவைகள், பாம்புகள், முதலை மற்றும் மான்கள் ஆகியவை அவற்றின் இயற்கையான உயிரியல் சூழலில் விடப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்புகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்களை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது. முன்னதாக புள்ளி மான்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கு காசநோய் தொற்று இல்லை என அறிக்கை பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று 26 புள்ளி மான்கள், வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு விடுவிக்கப்பட்டது. இந்த மான்களின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil