பிரதமர் ரோடு ஷோவில் தேர்தல் விதி மீறல்? நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தகவல்
ரோடு ஷோவில் பள்ளி சீருடையில் கலந்து கொண்ட மாணவர்கள்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார்.
இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க பள்ளி மாணவர்கள் சீருடையுடன் 50க்கும் மேற்பட்டோர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதே போன்று பா.ஜ.க சின்னம் பொறித்த துண்டுகளை அணிந்தபடி குழந்தைகள் நடத்திய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை இணை ஆணையர் ஆகியோரிடம் அறிக்கைகள் கேட்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதி இருக்கும் நிலையில் பள்ளி சீருடையுடன் மாணவிகள் பிரதமர் நிகழ்வில் பங்கேற்க அழைத்து வரப்பட்டதும், கலை நிகழ்ச்சிகளில் கட்சிக்கொடியுடன் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இது தொடர்பான காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu