முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்
செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”தமிழ்நாடு அரசின் சார்பில் பழனியில் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், ’முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்’ என்றும், ’விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும்’ என்றும், ‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும்’ என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முருகன் மாநாட்டை நடத்தியதில் திமுக அரசுக்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும், இந்த தீர்மானங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. ஆனால், இந்த தீர்மானங்களை திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், ’மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.
மதத்திலிருந்து மதச்சார்பற்ற அரசு விலகி நிற்க வேண்டும் என்றுதான் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மதச்சார்பற்ற அரசு இந்து மத கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஆதரிக்கும் கே.பாலகிருஷ்ணன் போன்றவர்கள், இந்து கோயில் நிதியில் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருகன் தொடர்பு போட்டிகள் நடத்தப்படும், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்படும் என்று கூறும்போது கொந்தளிக்கிறார்கள்.
இந்து கோயல்களை மட்டும் அரசு நிர்வகிப்பதுதான் மதச்சார்பின்மையா? இந்து கோயில்களை நிர்வகிக்கும் அரசு, இந்து மத நிகழ்ச்சிகளை நடத்திதானே ஆக வேண்டும். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது போல நிறைவேற்றி விட்டு, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை காரணம் காட்டி அதை செயல்படுத்தாமல் இருக்க திமுக அரசு போடும் நாடகமோ இது என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
மலேரியா, டெங்கு போல சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என மாநாடு போட்டு பேசியவர்கள், இன்று முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். இந்துக்களிடம் ஏற்பட்ட எழுச்சியே இதற்கு காரணம். எனவே, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு அடிபணியாமல் பழனி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை, திமுக நடத்தும் நாடகமாகவே பார்க்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu