முதலமைச்சர் ஸ்டாலின் ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்; வானதி சீனிவாசன் கோரிக்கை

முதலமைச்சர்  ஸ்டாலின் ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்; வானதி சீனிவாசன் கோரிக்கை
X

Coimbatore News- வானதி சீனிவாசன் (கோப்பு படம்)

Coimbatore News- முதலமைச்சர் ஸ்டாலின் ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என, வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Coimbatore News, Coimbatore News Today- பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் கொடிவேரி அணை பகுதியில் உள்ள ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களுக்கு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கொடிவேரி அணை ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களில், காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக 'கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின்' நிர்வாகிகளுக்கு தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு கட்டுபாட்டு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிஸ்கட்டுகளை ஏற்றி வந்த, TN43 D7390 ஆவின் வாகனத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்திலிருந்து காலாவதியான பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, சித்தோடு ஆவின் சேமிப்பு கிடங்கில் இருந்த காலாவதியான 6 டன் பிஸ்கட் பாக்கெட்டுகளை, பவுடர் பாயிண்ட் எனப்படும் இடத்திற்கு மாற்றிவிட்டு, சேமிப்பு கிடங்கில் புதிய பிஸ்கட் பாக்கெட்டுகளை வைக்கப்பட்டதாகவும், காலாவதியான பிஸ்கட்டுகள் அனுப்பப்பட்டது தெரியாமல் நடந்து விட்ட தவறு என்றும் ஆவின் நிர்வாகம் நாடகமாடி வருகிறது என, இந்த தவறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த, 'கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தினர்' குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு மக்களிடம் மிகவும் நல்ல பெயர் உள்ளது. ஆவின் விற்பனை செய்யும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும், பிஸ்கட், இனிப்புகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் மிகவும் தரமானவை என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால், நம்பிக்கையுடன் ஆவின் பொருள்களை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலாவதியான ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கிறது. நம்பி வாங்கும் பொது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது. இதுபோன்று செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

எனவே, காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது, ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டால் ஆவின் நிறுவனத்தை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும். அரசால் எந்தவொரு வணிக நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற அவப்பெயர் மக்கள் மனதில் நிலை பெற்று விடும். எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தலையிட்டு, ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!