அமைச்சரான பின் கோவை வரும் உதயநிதி: திமுகவினர் உற்சாகம்

அமைச்சரான பின் கோவை வரும் உதயநிதி: திமுகவினர் உற்சாகம்
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

அமைச்சரான பின் முதல் முறையாக கோவைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

தி.மு.க இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவர் கடந்த 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வெளிமாவட்ட பயணமாக கோவைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி வருகிறார்.

2006-11 காலகட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டு தமிழ்நாட்டில் பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கொங்கு மண்டலம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இந்த பாதிப்புகள் 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலித்தது. அந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாகவும் மின்வெட்டு பிரச்னை இருந்தது.

கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க ஸ்டாலின் 2021 தேர்தல் பிரசாரத்திலும் கொங்கு மண்டலத்தில் தனி கவனம் செலுத்தினார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அசைன்மென்ட் தரப்பட்டது. அதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் தற்போது திமுக மீண்டும் செல்வாக்கு பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் வரிசையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கொங்கு மண்டலத்தை குறிவைத்து பயணம் மேற்கொள்ள உள்ளார்.

24-ந் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் அன்று இரவு கோவையில் தங்குகிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பின்னர் மாலையில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கோவைக்கு வருகை தருகிறார். இது கோவை மாவட்ட தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவைக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிக பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்