பட்டப்பகலில் பயங்கரம்: கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். சிவானாந்தா காலனியை சேர்ந்தவர் மனோஜ். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்தனர்.
பின்னர் கோகுலும், மனோஜூம் நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள பகுதிக்கு டீ குடிக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என நினைத்து கடைக்கு நடந்து சென்றனர்.
கடையின் அருகே சென்று, பேசி கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கோகுலின் அருகே வந்தனர். வந்த வேகத்தில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கோகுலை சரமாரியாக வெட்டினர். இதில் கோகுலின் கழுத்தில் கத்தி வெட்டு விழுந்தது. கத்தி அப்படியே கழுத்தில் சிக்கிக் கொண்டது.
இதை பார்த்து அதிர்ச்சியான மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், அவரையும் வெட்டியது. இதனால் பலத்த காயம் அடைந்த இருவரும் அலறி சத்தம் போட்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வாலிபர்களை வெட்டிய கும்பலை அவர்கள் பிடிக்க முயன்றபோது, அதற்குள்ளாகவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடியவர்களை மீட்டபோது, கோகுல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மனோஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர். முன்விரோதத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது கோவை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கோவை கோர்ட்டு வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu