மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு
X

கோவையில் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன்

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும் என டிடிவி தினகரன் பேசினார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் அம்மா முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் பேசியதாவது:-

அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். அண்ணாமலை நன்கு படித்தவர், சிறந்த உழைப்பாளி, இரவு, பகல் பாராது மக்களுக்காக உழைக்கக் கூடியவர். நேர்மையாளர், கொள்கை பற்று மிக்கவர். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்ததற்கு காரணமே, அண்ணாமலையின் அணுகுமுறைதான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி மீண்டும் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வர வேண்டும்.

அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும். தமிழகத்தில் நாம் அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும் என நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன் என்று சொல்லி இருந்தேன். அமமுக கட்சியினர் சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளவர்கள். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தவர்களின் பட்டியலை கொடுத்து விட்டேன்.

ஒரு கூட்டணி அமைக்கும் போது அதில் பல கட்சிகளை சேர்க்க வேண்டியிருக்கும் என்பதால், பல சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டணியை இறுதி செய்யும்போது பல அழுத்தங்கள் வரும் என்பதை உணர்ந்தவன். எனது குறிக்கோள் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி மெகா கூட்டணியாக அமைய வேண்டும். அதில் பல கட்சிகள் வரவேண்டும். அதற்காக முயற்சி செய்யுங்கள் என்று தெரிவித்து இருந்தேன்.

அதன்படியே தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமைந்திருக்கிறது. நாங்கள்தான் அம்மாவின் உண்மையான கட்சி, எங்களிடம் தான் புரட்சித் தலைவர் தந்த சின்னம் இருக்கிறது என தம்பட்டம் அடிக்கின்ற சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை? அவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா? அவர்கள் யாரை பிரதமராக சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக மோடியை சொல்கிறோம்.

ஸ்டாலின் இருக்கும் கூட்டணிக்கு இப்போது யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? எடப்பாடி இருக்கும் கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா?ஸ்டாலினுக்கு பயந்து கொண்டு அதிமுகவினர் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக கள்ளக் கூட்டணி அமைத்திருக்கின்றனர். நான்கரை ஆண்டுகள் பழனிச்சாமி ஆட்சியில் இருந்த போது பல்வேறு முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது.

முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் இருக்கிறது. கொடநாடு கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதுபோன்ற நிலையில் தங்கள் மீது வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பழனிச்சாமி மறைமுகமாக திமுகவிற்கு உதவி செய்கிறார். மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக அரசினை மக்கள் வெறுக்க துவங்கி விட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது. திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வாக்குகளை பிரிப்பதற்காக திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து அண்ணா திமுக போட்டியிடுகிறது. மோடிக்கு இணையான பிரதமர் வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை.

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!