கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்

கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
X

கோவையில் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம் அடைந்தது.

கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. போத்தனூர், சாய்பாபா காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், டிவிஎஸ் நகர், ரயில் நிலையம், வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே உடையாம்பாளையம் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் பலத்த காற்று வீசியதால், ஒரு வீட்டின் தகரக் கூரை ஒன்று பறந்து மின் கம்பி மீது விழுந்தது. அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மின் கம்பியில் விழுந்திருந்த தகர கூரையை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தண்ணீர் தேங்கியதால் நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே கோவை கே.ஜி. தியேட்டர் பேருந்து நிறுத்ததில் இருந்த ஒரு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த மரம் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளைகளை எடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பத்திரமாக மீட்டனர். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் அடியில், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மழை நீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது இந்த பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!