உக்கடம் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
கரும்புக்கடை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
கோவையில் உக்கடம் மேம்பால பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆத்துப் பாலத்தில் இருந்து உக்கடம் வருவதற்கு அரை மணி நேரத்திற்க்கு மேலாக ஆகும். ஆனால் தற்போது ஆத்துப்பாலத்தில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் ரவுண்டானா முறை அமைத்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து கோவையில் இருந்து குனியமுத்தூர், சுந்தராபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள கரும்பு கடை பகுதியில் சிக்கி விடுகின்றனர். இதனால் நான்கு சக்கர வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் அந்தக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் அத்தனை வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசலில் தவித்து வருகின்றனர்.
உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் கரும்புக்கடையை கடந்து செல்வதற்கு மட்டும் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் விரக்தியில் உள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால், ஆத்துப்பாலம் பகுதிக்கு கால் டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் வர மறுப்பதால், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகையில், முன்பெல்லாம் ஆத்து பாலத்தை கடப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் காவல்துறையினர் அதை ரவுண்டானா முறை அமைத்து பயணத்தை விரைவாக செல்லும்படி மாற்றி விட்டனர். ஆனால் கரும்பு கடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத காரணத்தால், குறுகிய அந்த பகுதியில் அத்தனை வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே போக்குவரத்து காவல்துறையினர் விரைவில் கரும்பு கடை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தால் மட்டுமே அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் பயணம் எளிதாக இருக்கும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu