கோவை முக்கிய சாலைகளில் ரவுண்டானா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
ப்ரூக் பாண்ட் அருகே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக கோவை உள்ளது. இங்கு நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் கோவை மாநகர காவல்துறை தற்போது மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியை தொடங்கி உள்ளனர் இந்த பணிகளை போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் முன்னின்று தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கோவையில் அதிக போக்குவரத்து நெரிசலும், அதிக நேரம் சிக்னல்காக காத்திருக்க வேண்டி உள்ள லாலி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்களை முழுவதுமாக அகற்றி அதற்கு பதிலாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சிரமமின்றி சென்று வருகின்றன. இந்த மூன்று இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.
இதில் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். ரவுண்டானா அமைக்கப்பட்டதன் காரணமாக போக்குவரத்து சுலபமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறினாலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பகுதியில் புழுதி மண் பரப்பதால் சற்று அவதி அடைகின்றனர்.
இதேபோன்று புரூக் பாண்டு சாலையில் மற்றொரு சிக்னலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும் கோட்டப் பொறியாளா், சாலைப் பாதுகாப்பு பிரிவை சோ்ந்த அலுவலா்களுடன் இணைந்து புரூக் பாண்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், புரூக் பாண்டு சாலையில் இருந்து தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, புரூக் பாண்டு சாலையில் இருந்து பூ மார்க்கெட், ஆா்.எஸ்.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் திரும்பாமல் நேராக சென்று, சிரியன் சா்ச் ரோட்டில் வலதுபுறம் திரும்பி பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, புரூக் பாண்டு சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்துக்கு செல்லும் வாகனங்கள், தேவாங்கபேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல் பயணம் செய்யலாம்.
தேவாங்கர் பள்ளி சாலை மற்றும் அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் செல்லலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu