மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் நடப்பதாக வதந்தி - ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் நடப்பதாக வதந்தி - ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
X

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

மகளிர் உரிமைத் தொகைக்கு மனுக்களை விண்ணப்பியுங்கள் என்று வந்த தவறான குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும் எனவும், இந்த முகாம் இன்றும், திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் எனவும் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி ஒன்று பரவி உள்ளது. இதனை நம்பி அந்தந்த ஊர்களில் உள்ள பெண்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு திரண்டு வருகின்றனர்.

அதேபோல் கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் இந்த குறுஞ்செய்தியை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வருகை புரிந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதுபோன்ற எந்த ஒரு சிறப்பு முகாமும் நடைபெறவில்லை என்பதை அறிந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் பெண்கள் முறையிட்டனர். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என காவல்துறையினர் எடுத்துக் கூறியும், நடவடிக்கை இல்லாமல் தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அலுவகத்திற்கு வந்த பெண்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!