கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கு படைதிரட்டு கவாத்து பயிற்சி…

கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கு படைதிரட்டு கவாத்து பயிற்சி…
X

கோவையில் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு கடந்த 9 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி, ஆயுதப்படை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

பயிற்சியின்போது, நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு பணிகள், மன நலம் மற்றும் உடல் நலத்தை பேணுதல், ஆரோக்கியமான உணவு முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 550 மாநகர போலீஸார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியின் நிறைவு நாளான இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அணிவகுப்பு கவாத்தினை பார்வையிட்டார்.

மேலும், மாநகர காவல் துறையில் பயன்பாட்டில் இருந்து வரும் அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து ஆயுதப்படை காவலர்களுக்கும், காவல் வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, காவலர்களிடம் குறைகளையும், தேவைகளையும் அவர் கேட்டறிந்தார்.

அப்போது, ஆயுதப்படை காவலர்கள் பல்வேறு தேவைகளை முன் வைத்து தெரிவித்தனர். அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஆயுதப்படை காவல்துறை துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர்கள் கோவிந்தராஜூ, பிரதாப் சிங் மற்றும் காவல் ஆளிநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil