கோவையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை

கோவையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை
X

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில்  அதிகாரிகளுடன் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த கூட்டம்  கோவையில் நடந்தது. 

Tamilnadu CEC Election Meet தேர்தலை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tamilnadu CEC Election Meet

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சி விஜில், இ எஸ்.எம்.எஸ். அப்ளிகேஷன் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பது குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் பணிகள் எப்படி உள்ளது என்பது குறித்து நாங்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். குறிப்பாக கோவை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை உள்ளிட்டவை குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்வதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து வித முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக சிவில் அப்ளிகேஷன் மூலம் எந்த ஒரு தனி நபரும் உரிய ஆதாரத்துடன் குறிப்பாக வீடியோ அல்லது புகைப்படத்துடன் புகாரை பதிவு செய்யும் போது, 100 நிமிடங்களுக்குள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல காவல்துறை, வருவாய்த்துறை, வணிகவரித்துறை, வருமான வரித்துறை வங்கிகள் உள்பட பல்வேறு துறையினருக்கும் அடங்கிய குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு இ எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் மூலம் அங்கு புகார் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம். கடந்த காலங்களில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி நகரப் பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையானது குறைவாக பதிவாகியுள்ளது. எனவே அந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்து அவற்றில் அக்கறை செலுத்தி முழு வாக்குப்பதிவு நடைபெற தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்த உள்ளோம். பதட்டமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையத்திடம் ஒரு அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி அந்தந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தொடர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கும் அந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் போடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம். குறிப்பாக போலி வாக்காளர்களை கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். தேர்தல் பத்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றமும் இந்திய தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநில தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். தற்போது முதியவர்கள் தங்களது வாக்குப் பதிவுகளை செலுத்துவதற்கு 85 வயது நிர்ணயம் செய்துள்ளோம். அதை தாண்டி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வீடியோ காட்சிகள் பதிவு செய்வதுடன், வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல அரசு காப்பகங்கள் மற்றும் தனியார் காப்பகங்களில் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு செலுத்துவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. முறையாக அனைவரும் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும். டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறதா? அதேபோல சட்ட விரோதமாக அதிக அளவிலான பணம் டிஜிட்டல் முறையில் எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டாலும், அவை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறை, வருமான வரித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் தீவிர கண்காணிப்பு ஈடுபடுத்தப்படுவார்கள். ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக துணை ராணுவத்தினர் கோவை வந்துள்ளனர். தொடர்ந்து வரும் நாட்களில் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்காக அவர்கள் அனைவரும் விரைவில் வருவார்கள்” என்றார்

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil