மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
X

Coimbatore News- பாஜக தலைவர் அண்ணாமலை

Coimbatore News- தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது பழி சுமத்தி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை விமான நிலையம் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய பட்ஜெட் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை மாநகர தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் கடின உழைப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, புதிய இந்தியாவுக்கான நோக்கம், பாதுகாப்பு, கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய வளர்ச்சி கொள்கை காரணமாக இந்திய மக்கள் மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக அரசை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து, கடல் போக்குவரத்து ஆகியவை 60 சதவீதம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்திற்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

விவசாய நலன், மகளிர் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என 9 முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறைக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு வேளாண்மை துறை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு முதல் மாத சம்பளத்தை அரசு வழங்கும் திட்டம் அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமையும்.

சிறு குறு தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி மீதான சுங்க கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது அது சார்ந்த தொழிலையும் மேம்படுத்தும். காப்பர், இரும்பு ஆகிய உலோகங்களின் வரிக்குறைப்பு கோயம்புத்தூரில் உள்ள பவுண்டரி தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட பல மடங்கு அதிகமாக பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகத்திற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறை திட்டங்களுக்காக கடந்த ஆண்டை விட 300 கோடி அதிகம் ஒதுக்கி, மொத்தம் 6362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் பெயர் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படிப் பார்த்தால் தமிழக அரசு அறிவித்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. இதனால் அந்த மாவட்டங்களை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழகத்தின் தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக பெரிதும் உதவி செய்துள்ளது. மத்திய அரசு பல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி உள்ள போதும் அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது தொடர்ந்து பழி சுமத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்றுவதற்கு தமிழக அரசு 8 மாத காலம் இழுத்தடித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மாநில அரசு இந்த அளவிற்கு பொறுப்பற்று செயல்பட்டால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும்.

இதனால் வளர்ச்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும். பட்ஜெட் பணிகளை மேற்கொள்ளும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள நிதி செயலாளர்கள் கலந்து ஆலோசித்து தான் நிதி பங்கீடுகளை மேற்கொள்கின்றனர்.அவர்களிடத்தில் எந்த குழப்பமும் இல்லை.

தமிழ்நாடு எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட அதிக அளவு தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மாநில அரசும், மாநில அரசும் தலா 15.4 சதவீதம் நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு மட்டுமே 100% நிதி ஒதுக்க வேண்டும் என்பது போல பொய்யான குற்றச்சாட்டை தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி பங்கீடு உரிய வகையில் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!