கோவையில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
கோவையில் தொடங்கிய மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை திறந்துவைத்துப் பார்வையிடுகிறார் ஆட்சியர் சமீரன்
கோவையில் தொடங்கியுள்ள மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான கைத்தறி ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
தமிழக அரசின் கைத்தறி துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை, கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இந்த கண்காட்சியை ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்துப் பேசுகையில், கோவையில் தொடங்கப்பட்டுள்ள மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.
இதில் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவை கோரா காட்டன், காட்டன் மென்பட்டுச் சேலை, சுத்தபட்டுச் சேலை, நெகமம் காட்டன் சேலை, சென்னிமலை படுக்கை விரிப்புகள். தலையணை உறைகள், துண்டு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து ஜவுளிகளும் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
இக்கண்காட்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகன் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் சமூக, பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள் கைத்தறி துணிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், தேசிய கைத்தறி வளர்ச்சிக்கழக மேலாளர் ரத்தின வேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் குமரேசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் சிவகுமார், பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அப்துல் பார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu