தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை
பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் அதிகாரிகள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி, கோவையில் பணி புரியும் வடமாநிலத்தவர்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, கோவை ரயில் நிலைய சந்திப்பில், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் கோவை ரயில் நிலைய சந்திப்பில் இருக்கக் கூடிய ஒவ்வொரு பிளாட்பாமிலும் சோதனையை மேற்கொண்டனர். ரயில் மூலமாக கொண்டு செல்லப்படும் சரக்குகளும் முழுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டது. இது வழக்கமான சோதனை தான் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல தீபாவளி பண்டிகை ஒட்டி கோவையில் 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவர். எனவே வருடம் தோறும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்தும் சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், குன்னூர், ஊட்டி, கூடலூர் கோத்தகிரி செல்லும் பேருந்துகள் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து சேவையானது 28ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி அதிகாலை வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் 28ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பொதுமக்களின் வசதிகளுக்காக திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மண்டலத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சூலூர் பேருந்து நிலையத்திற்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் முக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவை கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu