சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் : செல்வபெருந்தகை தகவல்
Coimbatore News- செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை.
Coimbatore News, Coimbatore News Today- கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் சிறப்புமிக்க தலைவர்களை பெற்று இருக்கிறோம். தேர்தல் கூட்டணி என்பது வேறு இயக்கத்தை வலிமைப்படுத்துவது என்பது வேறு, இப்போதைய சூழலில் ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்கள் காங்கிரஸ் பேரிய இயக்கத்தில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் கூட வாட்ஸ்அப் டிபியில் ராகுல் காந்தியின் படத்தை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் முதன்மை கட்சியாக மாற்றுவதற்கு ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும்” என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் பேரியக்கத்தை வலிமைப்படுத்துவதற்கான நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். சிறிய கட்சிகளான நாம் தமிழர், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் போது, காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதற்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. எங்களுடைய கட்டமைப்பு வலிமை பெற்றால் தோழமைக் கட்சிகளின் கட்டமைப்பும் வலிமை பெறும்.
இது எங்களது ஜீவாதார உரிமை என்பதால், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். திமுகவுடன் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். திமுகவை விமர்சிக்கும் கட்சிகளை முதலில் எதிர்ப்பது காங்கிரஸ் தான். தோழமை என்பது வேறு, எங்களது கட்டமைப்பை வலிமைப்படுத்துவது என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது எங்களது வழித்தோன்றல்களின் ஆசை, அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu