ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரக்கன்று நடும் விழா
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடக்கி வைத்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என்றார் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்.
சர்வதேச ஜெயின் வர்த்தக நிறுவனம் (ஜிடோ), ஜெயின் சமுதாயத்தின் அறிவுசார், பொருளாதார மேம்பாடு மற்றும் சேவைக்கான மாபெரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை நகரை பசுமையுடனும் அழகாகவும் திகழச்செய்ய இந்த மகளிர் அணியினர் பல்வேறு வகையான மலர்களை தரும் 350 மரக்கன்றுகளை கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், ஸ்பாஞ்ச் பார்க் பகுதியில் ஆண்டு முழுவதும் பராமரிக்க முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: -கோவையை பசுமையாகவும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ள ஜிடோ அமைப்புக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் டிராப்பிக் ஐலாண்டுகள் மற்றும் ரவுண்டனாக்களை தேர்வு செய்து அந்த இடங்களில் மலர்கள் மற்றும் புல்வெளிகள் மூலம் அலங்கரித்து பராமரித்து வருகின்றோம். அரசு மட்டும் இல்லாமல், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாநகராட்சியின் திட்டங்களுக்கு துணையாக இருக்கின்றார்கள். இன்று நடைபெற்ற விழாவில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட 7 ரவுண்டானக்களை பராமரிப்பதற்காக ஜிடோ மகளிர் அமைப்பு முன்வந்து இருக்கின்றார்கள்.
இதன் மூலம் இந்த ரவுண்டனாக்கள் கோவையின் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் இது போன்ற நற்செயல்களில் மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு கோவைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
விழாவில் கோவை ஜிடோ மகளிர் அணி தலைவி புனம் பாப்னா, தலைமை செயலாளர் பிரஜியஜி பாட், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷில்பா துகார், கோவை ஜிடோ தலைவர் ராகேஷ்ஜி மேத்தா, ஜிடோ அபெக்ஸ் இயக்குனர் நிர்மல்ஜி ஜெயின் மற்றும் ஜிடோ உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu