கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள் சேதம்
Coimbatore News- மேற்கூரை சரிந்து விபத்து
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்றும் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று மாலை ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், டவுன்ஹால், ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த நிலையில் மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பினால் ஆன மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்களின் ஐந்து இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் அப்பகுதியில் நிற்பது வழக்கம். இன்று விபத்து நேர்ந்த போது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் நிற்கவில்லை. இதனால் உயிர் சேதம் போன்ற அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதேபோல இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்டு இருந்த பேருந்து நிறுத்ததின் நிழற்கூரை சரிந்து விழுந்தது. ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனி பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு கார் சேதமடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu