கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு கொடுக்க வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.
கோவை, பொள்ளாச்சியில் தேர்தலை இரத்து செய்யக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய அவ்வமைப்பின் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகமாகவும் நடைபெற வேண்டும் எனவும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் எனவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தோம். இது மட்டும் இல்லாமல் கோவை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். அரசியல் தலைவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி தர வேண்டும் என கோரிக்கை வைத்து, இதற்கான அனுமதியை உயர்நீதிமன்றத்தில் பெற்று உண்ணாவிரதம் நடத்தினோம். எனது மனு மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, நேர்மையான தேர்தலை நடத்தி விடுவதாகவும், பொள்ளாச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எனக்கு பதில் தெரிவித்திருந்தனர்.
தேர்தல் ஆணையம் அமைத்த குழுவினர் அப்பாவி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சோதித்து அவர்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கினார். ஆனால் ஓரிரு சம்பவங்களை தவிர அரசியல்வாதிகள் இதில் சிக்கவில்லை. தற்போது நேற்று இரவில் இருந்து கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் பண விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனைகள் அனைத்தும் கேலிக்கூத்தானது.
பெருமளவிலான வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டிருப்பதால் இந்த நாடாளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்க வழி இல்லை. இந்த தேர்தல் ஒரு பணநாயக தேர்தலாக மாறிவிட்டது.பணம் எங்கெல்லாம் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது யார் இதை விநியோகம் செய்து இருக்கிறார்கள் என்பதை எளிதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து விட முடியும் அவர்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் முடியும்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக இதனை விசாரித்து பணம் கொடுத்த வேட்பாளர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்தலையே ரத்து செய்ய வேண்டும். ஒருமுறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பணநாயக தேர்தலை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்த முடியும். அதனால் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu