மேட்டுப்பாளையம் -திருச்செந்தூர் இடையே இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர் இடையே இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல போதுமான ரயில் வசதிகள் இல்லை.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பழனி, திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக சில நேரங்களில் பொள்ளாச்சியில் இருந்தே நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிணத்துக்கடவு, போத்தனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி போத்தனூர் ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க மதுரை, பாலக்காடு, சேலம் கோட்டங்களின் அனுமதியை பெற வேண்டி உள்ளது. தற்போது பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் ரெயில் பொள்ளாச்சிக்கு வந்ததும் நிரம்பி விடுகிறது. இரவு நேரங்களில் ரெயில் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் கொடுத்து பஸ் மற்றும் பிற தனியார் வாகனங்களில் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.திருச்செந்தூர் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் உள்ளது. தென் மாவட்ட மக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, வழியாக திருச்செந்தூருக்கு தினசரி இரவு நேர ரெயில் முன்பதிவு வசதியுடன் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu