சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி ராஜ்குமார் வாக்குறுதி..!
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கணபதி ராஜ்குமார்
இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று 68 வது வட்டம் ரோஸ்மின் நகர், சிவானந்தா காலனி பகுதிகளில் பிரசாரத்தை துவக்கினார். பின்னர். சிவானந்தா காலனி பேருந்து நிலையம், 100 அடி சாலை, கிராஸ் கட் சாலை, சித்தாப்புதூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுகவிற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பட்டேல் சாலையில் அதிகளவில் சிறு குறு தொழிற்கூடங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி மற்றும் மூல பொருட்களின் விலை உயர்வு என ஒன்றிய அரசால் சிறு குறு தொழிற்கூடங்கள் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதன் அழிவு பாதையை தடுக்க திமுக அரசால் மட்டுமே முடியும், எங்கள் வாக்குகள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டுமென கூறினர்.
திமுக அரசு தொழிற்துறையினருக்கு என்ன திட்டங்கள் செய்துள்ளது என, சிறு குறு தொழிற் கூடங்களில் உள்ளவர்களுக்கு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் எடுத்து கூறினார்.
தொடர்ந்து அவர் பேட்டியின் போது கூறுகையில்,
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மூலதன உயர்வு என திண்டாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியிலும் இவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கப்பட வில்லை. அதேசமயம் தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோவையில் உள்ள சிறு குறு தொழிற்கூடங்களை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதுமட்டும் இன்றி, கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தது திமுக ஆட்சியில் தான், தற்போது மேலும் அங்கு புதிய நிறுவனங்கள் வர உள்ளது. சிறு குறு தொழில் நிறுனங்களின் மூல பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறு குறு தொழிற்கூடங்களின் பிரச்சினைகளை தீர்க்க திமுக வேட்பாளரான எனது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க திமுகவிற்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்து வருவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu