ரேசன் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரேசன் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

Ration Shop Working Hrs Extended இரண்டு தினங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 7.00 வரை பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும்

Ration Shop Working Hrs Extended

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1537 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 11 லட்சத்து 4942 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதம் பொங்கல் மற்றும் விடுமுறை காரணமாக அதிக அளவிலான நபர்கள் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கவில்லை. இதனால் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க உதவும் வகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேசன் கடைகள் இயங்கும் நேரத்தை அதிகரித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த நாட்களில் இதர பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் இம்மாதத்தில் அதிகமாக அரசு விடுமுறை நாட்கள் இருந்ததாலும், இந்த மாதத்தில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் நாளது தேதி வரை வாங்காமல் அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அறிய வந்துள்ளது.

எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் நாளது வரை பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற ஏதுவாக 30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!